எரிக் ஹாப்ஸ்பாமின் வாழ்வையும் அவருடைய வரலாற்றுப் பங்களிப்புகளையும் எளிமையாகவும் இயன்றவரை விரிவாகவும் அறிமுகம் செய்யும் நூல். வரலாறு அணுகப்படும் முறையை மாற்றியமைத்தவர்களுள் முக்கியமானவர் எரிக் ஹாப்ஸ்பாம். மார்க்சியம், சமூக வரலாறு, அரசியல், தொழிலாளர் இயக்கம் உள்ளிட்ட பல துறைகளைத் தன் பங்களிப்புகளால் வளப்படுத்தியவர். ஒரே நேரத்தில் சுடர்விடும் அறிவுஜீவியாகவும் மக்களுக்கு நெருக்கமான வரலாற்றாளராகவும் அவரால் திகழ முடிந்தது. மார்க்சிய வரலாற்றாசிரியராக இருந்தபோதும் அவருக்கு முற்றிலும் எதிரணியைச் சேர்ந்தவர்களும் நாடி, பயன்பெறும் படைப்புகளை ஹாப்ஸ்பாம் வழங்கியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, தொழிற்புரட்சி, ரஷ்யப் புரட்சி, முதலாளித்துவத்தின் எழுச்சி, பேரரசின் தோற்றம், சோவியத் யூனியனின் சரிவு, லத்தீன் அமெரிக்க அரசியல், மார்க்சியத்தின் எதிர்காலம் என்று தொடங்கி ஹாப்ஸ்பாமின் விரல் தீண்டும் ஒவ்வொரு பொருளும், அவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு விவாதமும் புது வெளிச்சம் பாய்ச்சுபவை. குறிப்பிடத்தக்க வரலாற்று ஆசிரியர்களையும் அவர்கள் படைப்புகளையும் தமிழில் அறிமுகம் செய்யவேண்டும் எனும் நோக்கில் 'ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்' நூலைத் தொடர்ந்து இந்நூல் வெளிவருகிறது.