Books For Children
இது எங்கள் வகுப்பறை
இது எங்கள் வகுப்பறை
வந்தவாசி ‘சன்னதிப் பள்ளி’யின் ஆசிரியர் சசிகலா. அதே பள்ளியில் படித்தவர். பள்ளியின் வரலாறு எப்போதும் அவர் நினைவில் இருக்கிறது. 130 ஆண்டுகள் பழமையான பள்ளி. எம்.ஜி.ஆரும், என்.எஸ். கிருஷ்ணன் மதுரமும் நாடகம் நடத்தி, நிதி அளித்து உருவாக்கிய பள்ளி. மாணவியாக அவர் அங்கு படிக்கும்போது, பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் 5, 6 பிரிவுகள் இருந்தனவாம். ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, வெறும் 90 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் எனப் பள்ளி தளர்ந்துவிட்டது. பள்ளியைச் சுற்றியிருக்கும் சமூகமும் மிக எளிய சமூகம். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பலர் தினக்கூலிகள்! சமூக உணர்வு நிரம்பியவர்களுக்கு, இந்தச் சூழல்- ஒரு சவால்! வேறு சிலருக்கு- வெறும் அனுதாபம்; இன்னும் சிலருக்கு- நமக்கென்ன மனோபாவம்! சவாலுக்காகக் காத்திருந்தவர் சசிகலா. வாய்ப்பு கிடைத்ததும், கட்டுடைத்து விசும்பி எழுகிறார். சவால் நிறைந்த வகுப்பறையில் சத்தங்களும் நிறைந்திருக்கும். நான் குறிப்பிடுவது குழந்தைகளின் குதூகலமான சத்தங்களை மட்டுமல்ல. தடைகள் உடைபடும் சத்தம் – ஆசிரியரின் ‘தான்’ உடைபடும் சத்தம்- வகுப்பறையின் எல்லைகள் உடைபடும் சத்தம்! – ச. மாடசாமி